சானியா மிர்சாவுக்கு பத்மஸ்ரீ விருது-சில சந்தேகங்கள்
சானியா மிர்சாவுக்கு மத்திய அரசால் வழங்கப் படும் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப் படுவதாக செய்திகள் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
இதன் தொடர்ச்சியாக எனக்குள் எழுந்த சில ஐயப்பாடுகள்.
சானியா மிர்சா உலக தர வரிசையில் 32 வது இடத்தில் இருக்கிறார் என்பது மிகவும் பெருமைப் படத்தக்க விஷயமே என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. மற்றபடி விளையாடும் திறமையைப் பொறுத்தவரை இவர் கடந்து செல்ல வேண்டிய பாதைகள் நிறையவே உள்ளன.
இவருடைய service(தமிழ்?)போடும் முறையும், வேகமும் இன்னும் மேம்பட வேண்டும். ஆடுகளத்தில் பந்தை விரட்டவும், place பண்ணும் லாவகமும் நிறைய கைகூடவேண்டும்.
என்னவோ மிர்சா டென்னிசில் முதலிடத்தையே பெற்றுவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை மீடியாக்களும், இதற்கு துணையாக அரசும் செயல் படுவது வேதனை தான். வேடிக்கை தான்.
டெண்டுல்கர் ஒரு மேட்சில் செஞ்சுரி அடித்து விட்டால் தூக்கி வைத்து கொண்டாடுவதும், நாலு மேட்சில் ரன் எடுக்கவில்லை என்றால் ஒரங்கட்டுவதும் மீடியாக்களுக்கும் நமக்கும் வாடிக்கை தானே?
இவருடைய நிலை இவ்வாறிருக்க, 32வது இடத்தில் இருக்கும் ஒருவருக்கு இந்த விருது பொருந்துமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
இந்த விருது இவருக்கு வழங்கப் பட்டது சரியென்றே வைத்துக் கொண்டலும், இதுவரை சாதனைகள் பல படைத்த பல பேருக்கு என்ன விருது வழங்கப்பட்டது.
தங்க மங்கை என்று அழைக்கப் பட்ட பி.டி உஷா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி, லியாண்டர் பயெஸ், அஞ்சு ஜார்ஜ் இவர்களெல்லாம் சாதனைகள் செய்யவில்லையா. இவர்களெல்லாம் விருதுக்கு தகுதியில்லையா?.
அதுசரி, ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்த போது அதை நடிகர்களிடம் கொடுத்து ஆரம்பித்து வைத்து சந்தோஷப் பட்டவர்களில்லையா நாம்?
விளையாட்டு நமக்கு 'விளையாட்டாய்' ஆகிவிட்டது